கேரள வெள்ளம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க கோரி அவசர வழக்கு
Aug 16, 2018
டெல்லி: கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியில் இருந்து குறைக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் உச்சநீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியை எட்டியுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு மாதமாக பெரும் மழை பெய்து வருகிறது. அங்கு ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் கேரள வரலாற்றில் ஏற்படாத வெள்ளம் ஆகும்.14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசியாவின் பெரிய ஆர்க் அணையான இடுக்கி அணை திறக்கப்பட்டது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள அளவான 142 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியுள்ளது. இதையடுத்து கேரளாவில் ஏற்கனவே வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், நீர்மட்ட அளவை 139 அடியாக குறைக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்தார். ஆனால் தமிழக அரசு இதில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கேரளாவில் வெள்ள நிலைமை மோசமாக இருப்பதால், நீர் மட்ட அளவை 139 அடியாக குறைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் இடுக்கியை சேர்ந்த ரசூல் ராயின் வழக்கு தொடுத்துள்ளார். அவசர வழக்காக இன்றே உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர்.