பொங்கல் விடுமுறையை ஒட்டி மாமல்லபுரம் கடலில் குளிக்க தடை: போலீசார் அறிவிப்பு!
Jan 14, 2019
பொங்கல் விழாவை முன்னிட்டு 6 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். பொங்கல் விழாவின் கடைசி நாள் விழாவான காணும் பொங்கல் வருகிற 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கானோர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு மையங்களுக்கும், கடற்கரை நகரங்களான கோவளம் மற்றும் மாமல்லபுரத்திற்கும் வருவர். எனவே இந்த பகுதிகளில் கடலில் இறங்கி குளிக்க காவல் துறை தடை விதித்துள்ளது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி சுப்பாராஜூ கூறுகையில், ‘‘தொடர் விடுமுறை எதிரொலியாக கடந்த ஆண்டுகளை விட அதிக கூட்டம் கிழக்கு கடற்கரை சாலைக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காணும் பொங்கல் விழாவிற்கு கோவளம், திருவிடந்தை, வடநெம்மேலி, மாமல்லபுரம் ஆகிய இடங்களுக்கு வருவோர் கடலில் இறங்கி குளிக்க காவல்துறை தடை விதித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், கோவளம் மற்றும் மாமல்லபுரம், கோவளம் போன்ற இடங்களில் உள்ள கடற்பகுதிகளில் அலையில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 250க்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் தனி நபர்கள் மூலமாக மோட்டார் படகுகள் மூலம் கடலுக்குள் செல்லவும், அவர்களை அழைத்துச் செல்வும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகள் காவல் துறையோடு ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.