Breaking News ஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் பறிமுதல் - வருமானவரித் துறையினர்!
L

Local News

கலைஞர் கருணாநிதிக்கு சோனியாகாந்தி பிறந்தநாள் வாழ்த்து


94-வது பிறந்தநாள் கொண்டாடும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறந்த நிர்வாகியாக அவர் திகழ்ந்ததாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- சிறந்த நிர்வாகி இன்றைய அரசியல் தலைவர்களில் மிக மூத்த தலைவர்களில் ஒருவராகத் திகழும் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா மிகவும் கோலாகலமாக ஜூன் 3-ந்தேதி நடைபெற இருப்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு சில தலைவர்கள்தான் தங்களது வாழ்க்கையும், பணிகளும் இரண்டு நூற்றாண்டுகளில் நீடிப்பதாகச் சொல்லிக்கொள்ள முடியும். 1940-ம் ஆண்டுகளில் தொடங்கிய கருணாநிதியின் அரசியல் வாழ்வானது, இருபதாம் நூற்றாண்டின் பெரும் பகுதியையும், 21-ம் நூற்றாண்டில் 17 ஆண்டுகளும் என முக்கியமான பல்வேறு நிகழ்வுகளிலும் தொடர்புடையதாக இருக்கிறது. தமிழக அரசியலை வடிவமைத்த இரு தூண்களில் ஒரு தூணாக 1969-ம் ஆண்டு முதல் கருணாநிதி ஆட்சியில் இருந்த போதும் சரி, ஆட்சியில் இல்லாத போதும் சரி, திகழ்ந்து வருகிறார். அவர் முதல்-அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்திருக்கிறார். குறிப்பாக திராவிட இயக்கத்தின் அடித்தளக் கருத்துகளை அமல்படுத்துவதிலும், எந்தவொரு முடிவையும் விரைந்து எடுப்பதிலும் தலைசிறந்தவராக விளங்கியுள்ளார். மாநில வளர்ச்சியிலும் மக்கள் நலத்திட்டங்களிலும் சரிநிகர் சமானமாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளார். அதுவே தமிழகத்தில் தொடர்ந்து இருந்து வந்துள்ள அரசுகளுக்கு அடையாளமாக இருந்து வந்துள்ளது. சிறந்த வாதத்திறமை கொண்டவர் எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருக்கும் போது தகுந்த ஆதாரங்களுடனும், சிறந்த வாதத்திறமை கொண்டவராகவும், கூர்மையான நகைச்சுவை உணர்வுடனும் பேசக்கூடிய வல்லமை கொண்டவராகவும் இருந்ததால் அரசுத்தரப்பில் அதை அவர் எதிர்கொள்ள தயாராக இருக்க நேரிட்டது. அரசியலே வாழ்வாகவும், உயிர் மூச்சாகவும் கருணாநிதி கொண்டிருந்தாலும், மேலும் பல்வேறு அம்சங்களுடன் அரிதானவராக, முழுமையான மனிதராகவே திகழ்ந்து வருகிறார். அவர் ஒரு பத்திரிகையாளராக, நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, கவிஞராக, நாடக ஆசிரியராக, திரைக்கதை எழுத்தாளராக, நடிகராக, திரைப்பட தயாரிப்பாளராக, எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் அறிஞராக விளங்கி வருகிறார். நீண்டநாள் வாழ வாழ்த்து கருணாநிதியின் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் சேர்ந்து நானும் இணைந்து எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு, நல்ல உடல்நிலையின் பெரும் பலனை அவர் பெறுவதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் சோனியாகாந்தி கூறியுள்ளார்.

Share

L

Latest Videos